பேசியே ஜெயித்த சத்யப்ரியா!

31

Speeches bring Glory for Sathya Priya - Women Secrets of Success

மாணவி, பேச்சாளர், ரெயின்போ எப்.எம். ஆர்.ஜே., மாலைநேர பள்ளி ஆசிரியை, பேச்சாளர்களை ஊக்குவிக்கும் ‘இலக்கியச்சாரல்’ அமைப்பின் செயலாளர், கவிதாயினி… இப்படி, கல்லூரியில் படித்துக்கொண்டே பல துறைகளில் ‘பிஸி’யாக வலம் வருகிறார் சத்யப்ரியா. சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் எம்.ஏ., தமிழ் இரண்டாமாண்டு மாணவி. ‘சென்னையின் மிகச்சிறந்த இளம் பேச்சாளர்’ என்கிற விருது, இவருக்கு சமீபத்தில் கிடைத்த சிறப்பு அங்கீகாரம்.

22 வயதிலேயே பல துறைகளில் கலக்கும் சத்யப்ரியாவிடம் நாமே கேள்விகள் கேட்பதைவிட சக மாணவியரை கேள்வி கேட்க விட்டால் எப்படி என்று நாம் யோசிக்க… ‘நாங்கள் கேள்வி கேட்கிறோம்’ என்று ஆர்வமாய் ஓடி வந்தார்கள், அவருடன் படிக்கும் மாணவியர் கனிமொழி, கிருத்திகா, சரண்யா, பாரதி, ஏ.சுகன்யா மற்றும் எஸ்.சுகன்யா.

“பேச்சாளர் ஆக வேண்டும் என்பது உன் சிறு வயது ஆசையா?” என்று முதல் கேள்விக் கணையை தொடுத்தார் கனிமொழி.

“என்னுடைய முதல் ஆசையே பேச்சாளர் ஆக வேண்டும் என்பதுதான். அரசியல் மேடை பேச்சாளரான அப்பா தமிழ்மணி என்னை சிறு வயதிலேயே தான் பேசும் மேடைகளுக்கு அழைத்துச் செல்வார். அவர் மேடையில் பேசுவதைப் பார்த்துப் பார்த்து எனக்கும் மேடைப் பேச்சு ஆர்வம் வந்துவிட்டது. ஸ்கூலில் படிக்கும்போதே மேடையேறி பேச ஆரம்பித்துவிட்டேன். ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் நடந்த சுதந்திர தின பேச்சுப் போட்டியில் முதன் முதலாக கலந்து கொண்டு பேசினேன். அதில் நான் பெற்றது முதல் பரிசு…” என்று சிலிர்த்துக் கூறியவர் சில நொடிகள் தனது பால்ய நினைவுகளில் மூழ்கியெழுந்தார்.

“எல்லோருக்கும் ரோல் மாடல் இருப்பார்களே… உனக்கு அப்படி யாராவது…” எஸ்.சுகன்யா கேட்டு முடிப்பதற்குள்ளாகவே படபடவென்று பேசினார் சத்யப்ரியா.

“எனக்கு ரோல் மாடல் என்று யாரும் கிடையாது. ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஒவ்வொரு திறமை இருக்கும். எல்லாப் பேச்சாளர்களிடம் உள்ள ப்ளஸ் பாயிண்ட்களை எடுத்துக்கொள்வேன். தமிழருவி மணியன், சுப.வீரபாண்டியன், பர்வீன் சுல்தானா, எஸ். ராமகிருஷ்ணன், பாரதி பாஸ்கர்… என்று ஒவ்வொருத்தரிடம் இருந்தும் பேச்சு ஸ்டைல், தெளிவான உச்சரிப்பு, தகவல்களை கொடுக்கும் விதம் மற்றும் தைரியத்தை கற்றுக்கொண்டு இருக்கிறேன். இவர்களோடு, புத்தகங்களையும் என்னுடைய நண்பர்கள் என்று சொல்வேன். வரலாறு, தமிழ் இலக்கியம், உலக இலக்கியம், நவீன கதை-கவிதைகள், மறைக்கப்பட்ட விஷயங்கள்… இப்படி நிறைய விஷயங்களை புத்தகங்களில் இருந்துதான் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதனால் நிறைய பேசுவேன்…” என்றவரிடம்,

“ஒரு பெண் ஓவரா பேசினால், அவளிடம் பேசுவதற்கு பசங்க ரொம்பவும் யோசிப்பாங்களே…” என்று கலாய்த்தார் கிருத்திகா.

“நல்லா பேசும் பெண்ணிடம் பேச பசங்க யோசிச்சா அது அவர்களுடைய பிரச்சினைதான். அதேநேரம், நான் பேச்சாளராக வலம் வருவதால்தான் எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நீ சொல்கிற மாதிரி அதிகமாக பேசும் பெண்ணிடம் பேச எந்த பசங்களும் யோசிச்ச மாதிரி தெரியவில்லை. அதேநேரம், அதுபற்றி நான் கவலைப்படவும் இல்லை. அதுபற்றி சிந்திக்கவும் இல்லை…” என்று, பளிச்சென்று பதில் தந்தார் சத்யப்ரியா.

“பொதுவா எல்லாப் பெண்களும் வீட்டில் பெட்டிப் பாம்பாய் அடங்கிக் கிடப்பார்கள். உன்னைப் பார்த்தால் அப்படி தெரியல. ஆனாலும், உண்மையைச் சொல்லேன்…” என்று, சத்யப்ரியாவை அடுத்ததாக சீண்டிவிட்டார் பாரதி.

“நான் எப்போதும் ஒரே மாதிரிதான். வெளியில் பேசுவதைப் போலத்தான் வீட்டிலும் ப்ரண்ட்லியா பேசுவேன். ஒரு பிரச்சினை என்றால் பயந்து ஒதுங்கிவிட மாட்டேன். அங்கே முதல் குரல் கொடுப்பது நானாகத்தான் இருக்கும். சமீபத்தில் கூட அக்கா உறவு முறை உள்ளவரை அவரது கணவர் தாய் வீட்டுக்கு சண்டைப் போட்டு அனுப்பிவிட… நான் அவரது கணவரை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் இழுத்துக்கொண்டு போய்விட்டேன். ஆணும் பெண்ணும் சரிசமம்தான். பெண் என்பதற்காக, எந்த சூழ்நிலையிலும் நமது உரிமையை விட்டுக்கொடுக்கக்கூடாது…” என்ற சத்யப்ரியாவின் பேச்சில் கொஞ்சம் அனல் கக்க, அத்தனை பேரும் திடீர் அதிர்ச்சியில் கப்-சிப். நாமும்தான்!

“இப்படியே போனால், வேறு எங்கேதான் வாலை, ஸாரி… வாயை சுருட்டிக்கிட்டு அமைதியாக இருப்பாய்?” என்று குறுக்காக னழைந்து சட்டென்று கேட்டார் சரண்யா.

“தியானம் செய்யும் போதுதான். மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு என்றால் உடனே திருவான்மியூரில் உள்ள அரவிந்தர் தியான மண்டபத்திற்கு சென்று தியானத்தில் மூழ்கி விடுவேன். தியானத்தில் எனது பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வுகள் கிடைப்பதாக நம்புகிறேன். மற்றபடி, எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்பதால் அடிக்கடி கோவில்களுக்கும் செல்வேன். அங்கேயும் அமைதியாகத்தான் இருப்பேன்…” தனது சுருதியை குறைத்து சொன்னார் சத்யப்ரியா.

அவரது அமைதியை விரட்டும் விதமாக, “நீ நல்லா கவிதையும் எழுதுவாயாமே…” என்று, பட்டாசாக ஒரு கேள்வியை கொளுத்திப் போட்டார் கனிமொழி.

“கவிதை எழுதுவதற்கு என்று உட்கார மாட்டேன். திடீரென்று கவிதை தோன்றும். அது எந்த இடமாக இருந்தாலும், உடனே எழுதி வைத்து விடுவேன். சிலநேரங்களில் சமையல் செய்து கொண்டிருக்கும் போதும் கூட கவிதை தோன்றுவது உண்டு. அடுப்பில் என்ன இருந்தாலும் சரி, என் கற்பனையில் உதித்த அந்த கவிதையை எழுதிய பிறகுதான் சமையலறைக்கு வருவேன்…” என்றவரிடம்,

“எத்தனையோ கவிதை எழுதி இருந்தாலும், நமக்கு ரொம்பவும் பிடிச்ச கவிதைன்னு ஒண்ணு இருக்குமே… அது என்ன?” என்று கேட்டார், ஏ.சுகன்யா.

“ஆயுதம்
வாங்கிய காசிற்கு
அரிசி வாங்கியிருந்தால்…
வெந்திருக்காது
மனித உடல்கள்!’

– இதுதான் எனக்கு பிடிச்ச கவிதை மட்டுமல்லாம, பலரோட பாராட்டுகளையும் பெற்றுத்தந்த கவிதையும்! தமிழீழ கொடூரங்களை மனதில் வைத்து எழுதிய கவிதை இது…” என்று சொன்ன சத்யப்ரியாவிடம், திடீரென்று கனத்த அமைதி வந்து ஒட்டிக்கொண்டது.

அவரை உற்சாகப்படுத்துவதற்காக, “நீ பார்த்த பேச்சு மேடைகளில் மறக்க முடியாதது எது?” என்று கேட்டு, அவரது கவனத்தை திசை திருப்பினார் கனிமொழி.

“சமீபத்தில் சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சார்பில் நடந்த இளைஞர் அரங்கத்தில், ‘இலைமறை காயாய் இல்லத்தரசிகள்’ என்ற தலைப்பில் குங்கிலியகலய நாயனாருடைய மனைவியின் பெருமைகள் பற்றி 20 நிமிடங்கள் பேசினேன். பேசி முடித்ததும் பார்வையாளர்களிடம் இருந்து பலத்த கரகோஷம் வந்தது. எங்கள் கல்லூரி தமிழ் துறை தலைவர் நித்ய கல்யாணி ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடித்து பாராட்டினார். ‘நீ இவ்ளோ சிறப்பா பேசுவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. மிகச்சிறந்த சொற்பொழிவாளர் பேச்சை கேட்ட மாதிரி இருந்துச்சு உன் பேச்சு…’ என்று அவர் சொன்னபோது, நான் இன்ப வெள்ளத்தில் மூழ்கி திளைத்தேன். அவரை அடுத்து, வயது வித்தியாசம் இன்றி எல்லோரும் எனது பேச்சை பாராட்ட… அந்த பாராட்டு மழையில் நனைந்து நான் மீள்வதற்குள் வெகுநேரம் ஆகிவிட்டது…” என்றவர், அந்த சந்தோஷ நிமிடங்களில் மறுபடியும் கரைந்தார்.

“சரி, சந்தோஷப்பட்டது போதும், உன்னைப் போல நாங்களும் பேச என்ன செய்யணும்?” என்று, அவர் நீந்திக் கொண்டிருந்த சந்தோஷக் கடலில் சின்னக் கல்லை எறிந்தார் பாரதி.

“முதலில் பயம் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்ததாக, என்னால் எல்லாம் முடியும் என்கிற தன்னம்பிக்கை வேண்டும். இவை தவிர, நிறைய படிக்கணும். பெரிய பெரிய பேச்சாளர்கள் எல்லாம் 10 நிமிடம் பேச 2-3 மணி நேரம் படித்து தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள். நாம் எத்தனை மேடைகளில் ஏறி பேசியிருந்தாலும், ஒவ்வொரு மேடையையும் முதல் மேடையாக கருத வேண்டும். பேச்சில் தலைக்கணம் தெரியக்கூடாது. முடிந்தவரை நல்ல செய்திகளை கொடுக்க வேண்டும்…” என்று, அந்த பட்டியலை நீட்டிக்கொண்டே போனார்.

“நிறைவாக, ஒரு தத்துவம் சொல்லுங்களேன்…” – இது நாம் கேட்டது.

“புத்தி உள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை.”

எங்கேயோ கேட்டது மாதிரி இருந்தாலும், அறிவார்ந்த தத்துவமாய் சொன்னார் சத்யப்ரியா.