பூப்பந்தில் தங்கம் வென்ற தாரகைகள்!

33

எந்த பந்தாவும் இல்லாமல் பூப்பந்து (பால் பேட்மிண்டன்) விளையாடுகிறார்கள், அஸ்வினி, சவுமியா, வைஜெயந்தி. சமீபத்தில் சட்டீஸ்கர் மாநிலம் பிலாய் நகரில் நடந்த தேசிய பூப்பந்து போட்டியில் மூன்றாவது முறையாக தங்கம் வென்று திரும்பிய தமிழக பூப்பந்து அணியின் சென்னை வீராங்கனைகள் இவர்கள். பிளஸ்-2 தேர்வு எழுதியிருக்கும் அஸ்வினி ஜூனியர் பிரிவிலும், 10-ம் வகுப்பு படித்து வரும் சவுமியா, வைஜெயந்தி ஆகியோர் சப்-ஜூனியர் பிரிவிலும் பங்கேற்று விளையாடினர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள லேடி சிவகாமி அய்யர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியரான அவர்களிடம் நாம் பேச்சுக் கொடுத்த போது பூப்பந்து தொடர்பான நிறைய தகவல்களை அள்ளிக் கொட்டினார்கள், வார்த்தைகளில்!

“இந்த விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் பந்து ‘பூ’ போன்று மென்மையாக இருப்பதால் ‘பூப்பந்து’ என்று பெயர் ஏற்பட்டது. இந்திய நைலானும், ஆஸ்திரேலிய சணலும் கொண்டு இது தயாரிக்கப்படுகிறது. ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்தது இந்த விளையாட்டு. நம் தமிழகம்தான் இந்த விளையாட்டின் பிறப்பிடம். தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர்கள்தான் இந்த விளையாட்டை ஆரம்பித்து வைத்தவர்கள்.

மன்னர்கள் காலத்தில் ராணிகளும், அவர்களது தோழியரும் அரண்மனையின் அந்தப்புரத்தில் இந்த பூப்பந்தை பொழுது போக்கிற்காக விளையாடி வந்தனர். இந்த விளையாட்டின் வரலாற்றுப் பாரம்பரியம் மிக நீளமானது என்றாலும், இப்போது அந்த விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை.

இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 22 மாநிலங்களில்தான் இந்த விளையாட்டு பரவலாக அறியப்படுகிறது. இவை தவிர, இலங்கை, வங்கதேசம், பூடான், பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலும் ஓரளவுக்கு விளையாடப்படுகிறது…” என்று, பூப்பந்து விளையாட்டின் அன்றைய வரலாற்றையும், இன்றைய நிலையையும் முத்தாய்ப்பாக சொன்னார்கள் மூவரும்!

தொடர்ந்து, மாணவிகள் மூன்று பேரும் தாங்கள் பூப்பந்து விளையாட்டை தேர்வு செய்ய என்ன காரணம் என்பதை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.

“ஆறாம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு பூப்பந்து விளையாடுவதில் ஆர்வம் வந்துவிட்டது. அக்கா சுகன்யாவும் சிறந்த பூப்பந்து வீராங்கனை. அவரைப் பார்த்துதான் நானும் பூப்பந்து விளையாட கற்றுக்கொண்டேன். பெற்றோரும் என்னை ஊக்கப்படுத்தினர்…” என்று சவுமியா சொல்ல…

“நான் ஆறு வருடமாக பூப்பந்து விளையாடி வருகிறேன். என்னுடைய அக்கா தனலட்சுமி தேசிய பூப்பந்து வீராங்கனை. நிறைய மெடல்கள் வாங்கி இருக்கிறார். அவரைப் பார்த்துதான் எனக்கும் விளையாட்டு ஆர்வம் வந்தது…” என்று மனம் திறந்தார் அஸ்வினி. வைஜெயந்தியும் 3 வருடமாக பூப்பந்து விளையாட்டில் சிறப்பு பயிற்சிகளை பெற்றுள்ளார்.

எந்தவொரு விளையாட்டிலும் சாதிக்க வேண்டும் என்றால், அதில் சிறந்த பயிற்சிகளைப் பெற வேண்டும். நேரம் காலம் பார்க்காமல் பயிற்சி செய்தால் மாத்திரமே வெற்றிக்கனியை எட்டிப் பறிக்க முடியும். அந்த வகையில், நிறையவே பயிற்சி மேற்கொள்கிறார்கள் இவர்கள்.

“தினமும் அதிகாலையில் 5.30 மணிக்கெல்லாம் எழுந்து விடுவோம். எழுந்ததும் சிறிதுநேரம் படித்துவிட்டு, 6 மணி முதல் 9 மணி வரை பயிற்சியில் ஈடுபடுவோம். வகுப்பு நேரத்திலும் நேரம் ஒதுக்கி விளையாடுவோம். மாலையில் 4 மணி முதல் 6 மணிவரை பயிற்சி மேற்கொள்வோம். சாதாரண நாட்களில் இந்த பயிற்சி என்றால், விடுமுறை நாட்களில் பயிற்சியை இன்னும் தீவிரமாக்கிக் கொள்வோம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கே பயிற்சியை துவக்கி விடுவோம். முற்பகல் 11 மணிவரை எங்களது பயிற்சி நீடிக்கும்…” என்று அஸ்வினி சொல்லி முடித்தபோது நிஜமாகவே அவருக்கு கொஞ்சம் மூச்சு வாங்கியது.

இந்த மாணவியருக்கு மேலும் ஊக்கம் தரும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் காலையில் 11 மணிக்கு சத்துமாவு, வாழைப்பழம், பிரெட் ஆகியவையும், மாலையில் 3 மணிக்கு மேற்படி உணவுகளுடன் அவித்த முட்டையும் இலவசமாக தரப்படுகிறது.

“எல்லா விளையாட்டுகளையும் போலவே பூப்பந்து விளையாடுவதாலும் பல நன்மைகள் ஒருவருக்கு கிடைக்கின்றன. முதலில் நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது. உடலில் தேவையில்லாமல் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது. நல்ல நினைவு திறன் பெற முடிகிறது. அதனால், தேர்வுகளிலும் நல்ல மார்க் வாங்கலாம். இரவில் நன்றாக உறக்கமும் வரும். மேலும், இப்போதெல்லாம் சீதோஷ்ண நிலை கொஞ்சம் மாறினாலேயே பலருக்கு உடல் ரீதியாக பல தொந்தரவுகள் வந்து விடுகின்றன.

ஆனால், பூப்பந்தாக இருந்தாலும் சரி, வேறு எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி, விளையாட்டு வீரர்-வீராங்கனைகளைப் பொறுத்தவரை அவர்களது உடல்நிலை சட்டென்று பாதிக்கப்பட்டு விடாது. மேலும், உடல் எடையை குறைப்பதற்காகவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்காகவும் ‘ஜிம்’களுக்கு சென்று பணம் செலவு செய்ய வேண்டும் என்கிற அவசியமே கிடையாது. வீட்டிலேயே வலை கட்டி பூப்பந்து விளையாடலாம். ஒரு மாதம் பயிற்சி பெற்றாலே சிறப்பாக விளையாடலாம்…” என்று, பூப்பந்து எளிமையான விளையாட்டுதான் என்று ‘சர்டிபிகேட்’ கொடுத்தார் வைஜெயந்தி.

தேசிய பூப்பந்து போட்டியில் தமிழக அணி வெற்றிவாகை சூடிய தருணம் மறக்க முடியாதது என்று, அடுத்ததாக கூறி சிறிது இடைவெளி விட்ட சவுமியா, அந்த இறுதிப்போட்டி நிகழ்வை ‘லைவ்’ ஆக நம் மனக்கண் முன்பு கொண்டு வந்தார்.

“இறுதிப்போட்டியில் ஆந்திர மாநில அணியுடன் மோதினோம். ஆந்திர வீராங்கனைகளை பார்த்த மாத்திரத்திலேயே எங்கள் அனைவருக்கும் கொஞ்சம் பயம் வந்துவிட்டது. அந்த அணியின் வீராங்கனைகள் அனைவரும் எங்களை விட நல்ல உயரமாக இருந்தார்கள். நாங்கள் பயந்தது போலவே அவர்கள் ஆரம்பத்தில் எங்களுக்கு இணையாக விளையாடவும் செய்தனர். முதல் அரை மணி நேரத்தில் நாங்கள் 18 பாயிண்ட்கள் எடுத்திருந்தபோது அவர்கள் 15 பாயிண்ட்கள் எடுத்திருந்தனர். இதனால், எங்களது பரபரப்பு அதிகமானது. இதற்கு மேலும் அவர்கள் பாயிண்ட் எடுக்காவிட்டால் சிக்கல் ஆகிவிடும் என்பதை உணர்ந்த நாங்கள் அடுத்ததாக கூட்டு முயற்சியோடு இன்னும் தீவிரமாக விளையாடினோம். அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது. 16 பாயிண்ட்களுக்கு மேல் அவர்களை எடுக்கவிடவில்லை. அதற்குள் வெற்றி இலக்கான 29 பாயிண்ட்களை எடுத்து நாங்கள் வெற்றி பெற்றோம்…” என்று, அந்த வெற்றியின் பரவசத்துடனேயே சொன்னார் சவுமியா.

இப்படி, பூப்பந்து விளையாட்டின் சிறப்புகளும் பெருமைகளும் பல இருக்க… அந்த விளையாட்டை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்ல பெரும் முயற்சிகளும் இன்னொரு புறம் நடந்து வருகின்றன.

“பூப்பந்து, செலவு அதிகம் வைக்காத விளையாட்டு. மிக எளிதில் இதை கற்றுக்கொள்ளலாம். ஆரம்ப காலக்கட்டத்தில் பெண்களே இதில் பங்கு பெற்றாலும், தற்போது ஆண்களும் பெண்களும் இதை விளையாடி வருகிறார்கள். ஆனால், கிரிக்கெட்டுக்கு தரப்படும் முக்கியத்துவம் – அங்கீகாரம் இதற்கு தரப்படுவதில்லை. ஒலிம்பிக் விளையாட்டுகளின் பட்டியலில் பூப்பந்தையும் இணைக்க இந்திய பூப்பந்து கழகம் பரிந்துரை செய்துள்ளது. விரைவில் ஒலிம்பிக் போட்டியில் பூப்பந்து விளையாட்டை பார்க்க வேண்டும் என்பது எங்களது ஆசை. உலக அளவில் இந்த விளையாட்டு பிரபலமானால் அந்த கனவு எளிதில் நனவாகிவிடும். அதற்கான மாற்றங்கள் உடனடியாக ஏற்பட வேண்டும்…” என்று, பூப்பந்து விளையாட்டின் இன்னொரு முகத்தை வெளிப்படையாகச் சொன்னார், தங்கம் வென்ற மாணவிகளுக்கு பயிற்சியாளராக இருக்கும் ரமேஷ்.

நாமும் பூப்பந்து ‘பாப்புலராக’ வாழ்த்துவோம்!