ஜெயம் ரவிக்கு ஜோடியானார் நயன்தாரா!

18

நயன்தாரா மீதான கோலிவுட் மோகம் இப்போதைக்கு குறைவதாக இல்லை போலிருக்கிறது. அடுத்தடுத்து புளியங்கொம்புகளாக அம்மணியைத் தேடிப் போகின்றன.

இந்த ஆண்டு மட்டும் உதயநிதி ஸ்டாலின், அஜீத், ஆர்யா ஆகியோர் ஜோடியாக நடித்துவருகிறார் நயன்தாரா. மேலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் அனாமிகா என்ற தமிழ் – தெலுங்கு இருமொழிப் படத்திலும் நடித்து வருகிறார்.

இப்போது தமிழில் அடுத்த பெரிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் அவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாகிறார்.

படத்தை இயக்கவிருப்பவர் ஜெயம் ராஜா. தில்லாலங்கிடிக்குப் பிறகு ராஜா – ரவி இணையும் இந்தப் படத்தை கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஏற்கெனவே நிமிர்ந்து நில் படத்தில் ரவியின் ஜோடியாக நயன்தாராதான் ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் அவருக்குப் பதில் அமலா பால் ஒப்பந்தமானார்.

இப்போது மீண்டும் இருவரும் இணைகிறார்கள். ஜெயம் ரவி – நயன்தாரா இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை.

படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.