சிங்கம் – விமர்சனம்! || சிங்கம் 2 – சூர்யாவின் கர்ஜனை! சரவெடித் திரைக்கதை!

40
விஜயகாந்த் செய்த வானத்தில் பறக்கும் சாகசங்களில் தொடங்கி தம்பி கார்த்தி அலெக்ஸ் பாண்டியன் படத்தில் ஓடும் ரயிலை குறுக்குவழியில் சென்று பிடித்துவிடும் அதிபயங்கரமான அட்டகாசங்கள் வரை அனைத்தையும் ஒன்றுவிடாமல் செய்கிறார் சூர்யா. சூர்யாவின் ஸ்டண்டுகளைப் பார்த்து ஆப்பரிக்கா போலிசே அசந்துபோறாங்கன்னா பார்த்துக்கோங்க மக்களே!
 
 
தொண்டைக்குள்ள ஏதோ மைக் வச்சுத் தைத்தமாதிரி உச்சஸ்தாயில் வசனங்களைப் பேசி ரணகளப்படுத்துகிறார் சூர்யா (ஸ்ட்ரிட்டான போலிசாம்). ஆகாயத்தில் பறப்பது, மாடியில் இருந்து குதிப்பது, ஒரே அடியில் ஒன்பது பேரை சாய்ப்பது என கர்ஜிக்கும் சிங்கமாகவே வலம் வருகிறார் சூர்யா. இடை இடையே குத்துப்பாட்டும் கலர் கலர் டான்சும் கூட இருக்குதுங்கோவ்!
 
போலிஸ் வேலையில் இருந்து விலகிவிட்ட சூர்யா தூத்துக்குடி பள்ளியில் என்.சி.சி மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இருந்தாலும் முதலமைச்சரின் உத்தரவுப்படி தூத்துக்குடியில் கப்பல் வழியே நடக்கும் ஆயுதக்கடத்தல் பற்றி ஆராய்ந்து வருகிறார். அதே இடத்தில் போதைப் பொருள் கடத்தல் நடப்பதும் தெரியவருகிறது. 
 
இது பற்றி போலிசுக்கு தகவல் சொல்ல… டிப்பார்ட்மெண்டில் பல கருப்பு ஆடுகள் அந்த கடத்தல் கும்பலுக்கு கைக்கூலிகளாக இருப்பதும் அம்பலமாகிறது. எரிமலையாய் இடிமழையாய் வெகுண்டெழும் சூர்யா, டிப்பார்ட்மெண்டில் இருக்கும் யாரையும் நம்பாமல், தூத்துக்குடி டி.எஸ்.பி-யாக தானே சார்ஜ் எடுக்கிறார்.
 
 
அடியாள் வேலை செய்கிறவர் தொடங்கி, இந்த கடத்தல் பிஸ்னசின் ஆணிவேரை  கண்டுப்பிடிக்கிறார். டேனி என்ற இராட்சதனை தென் ஆப்ரிக்காவிற்கே சென்று அதே சாகசங்களை நடத்தி அவனைப் பிடித்துவந்து தூத்துக்குடி சிறையில் அடைக்கிறார் சிங்கம் சூர்யா. 
 
சரவெடி மாதிரி சரசரவென நகர்கிறது திரைக்கதை. திறமையான திரைக்கதை இருந்தால் மட்டும் போதும், எந்த ’டப்பா’ கதையைக் கொண்ட படத்தையும் ஹிட்டாக்கி விடலாம் என்பது ஹரி சிங்கம் படத்தில் நிரூபித்திருக்கிறார். தேவையான அளவு மசாலா சேர்ப்பது மாதிரி அனுஷ்காவையும் ஹன்சிகாவையும் அளவுடன் பயன்படுத்தி இருக்கிறார் ஹரி. 
 
 
சந்தானமும் நல்லாவே சிரிக்க வைக்கிறார். விவேக்கும் படத்தில் இருக்கிறார். ஆனால் அவர் காமெடி செய்வதற்கெல்லாம் திரைக்கதையில் டைம் இல்லை.ஆயுதங்கள் எதுவும் இல்லாமல், ரவுடிக்கும்பலை சூரையாடும் காட்சியில் சூர்யா பிண்ணிட்டார். ஒரு மாஸ் ஹீரோவுக்கான  அத்தனை தகுதியும் அவருக்கு இருப்பதை சிங்கம் 2 மீண்டும் உறுதி செய்கிறது.
 
சூர்யாவிடம் சந்தானம், குதிரையை போட்டோவுல பார்த்திருப்பீங்க, டி.வியில பார்த்திருப்பீங்க, ஆனா சுடிதார்போட்டு பார்த்திருக்கீங்களா என்று சொல்லி அனுஷ்காவைக் காட்டுவதும், தொடர்ந்து… ஓரமா கூட்டிட்டு போய் ஓங்கி ஒரு கிஸ் அடிச்சா ஒன்ற மாசத்துக்கு தூக்கம் வராது… என்று சிங்கம் ஸ்டைலில் சொல்வது செம காமெடி!
 
 
கனவிலும் சாத்தியமாகாத இது போன்ற விஷயங்களை தமிழ்சினிமாவில் பலர் இதற்கு முன்பாக செய்துகாட்டி இருக்கிறார்கள். தென் ஆப்ரிக்காவில் சூர்யாவின் ஸ்டண்ட் காட்சிகளை பார்த்து சிரிப்பு வந்தாலும், ஜனங்க ரசிக்கிறாங்களே… அதுக்கு மேல நாம என்ன சொல்லமுடியும்! 
 
சிங்கம் 2 – சூர்யாவின் கர்ஜனை! சரவெடித் திரைக்கதை!