உருளைக்கிழங்கு கேரட் தொக்கு

30

தேவையான பொருள்கள்:

 1. உருளைக்கிழங்கு = அரை கிலோ
 2. கேரட்  = கால் கிலோ
 3. பச்சை மிளகாய் = 50 கிராம்
 4. இஞ்சி = 1 அங்குலம்
 5. வெந்தயம் = 1 ஸ்பூன்
 6. பெருங்காயப் பொடி = அரை ஸ்பூன்
 7. புளி = 50 கிராம்
 8. எண்ணெய் = அரை கப்
 9. உப்பு = தேவையான அளவு

செய்முறை:

 • உருளைக்கிழங்கை தோல் சீவி புளியங்கொட்டை அளவில் நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி முடிந்த வரை பிழிந்துக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் நீக்கி விட்டுத் துருவிக் கொள்ளவும்.
 • வெறும் வாணலியில் வெந்தயத்தை வாசனை வரும் அளவு சிவக்க வறுத்துப் பொடி செய்யவும்.
 • புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். இதனோடு தேவையான அளவு உப்பைக் கலந்து வைக்கவும். பச்சை மிளகாயை நுனியில் சிறிதள‌வு கீறி வைக்கவும்.
 • எண்ணெய் முழுவதையும் வாணலியில் வைத்து புகை வரும் படி காய விட்டுப் பின் பாதி எண்ணெயை பிரித்து ஆற விடவும். காயும் எண்ணெயில் முதலில் உருளைக்கிழங்கை சேர்த்து அதன் ஈர‌ம் வற்றி சொட சொடப்பு அடங்கும் வரை பொரிக்கவும்.
 • ஓசை அடங்கியதும் துருவிய இஞ்சியையும், பிழிந்த கேரட்டையும் சேர்க்கவும். இதனுடன் கூட பச்சை மிளகாயையும் சேர்க்கவும். மீண்டும் இதை நீர் சொட சொடப்பு அடங்கி ஓசை குறையும் வரை வதக்கவும்.
 • அடுத்து உப்பு சேர்த்து புளி கரைசலைக் கொட்டி நன்கு கொதிக்க விடவும். கொதி வந்ததும் தீயைக் குறைத்து புளி நீர் வற்றி சுருண்டு வரும் வரை வதக்கவும்.
 • இதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை சேர்க்க கூடாது.

சுவையான உருளைக்கிழங்கு கேரட் தொக்கு தயார். இது புது விதமான சுவையுடன் இருக்கும். தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றோடும், மற்ற வகை ரைஸோடும் , சப்பாத்தி, பூரி, பொங்கல் ஆகியவற்றோடும் பரிமாறலாம்.

மருத்துவ குணங்கள்:

 • உருளைக்கிழங்கில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, தாமிரம், மாங்கனீசு, மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
 • உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.