உங்களை அனைவரும் விரும்ப…

34

உங்களை அனைவரும் விரும்ப…

நீங்கள் யாரை அதிகமாக விரும்புவீர்கள்!
அழகாக இருப்பவர்களையா! இனிமையாக
பேசுகிறவர்களையா! சிரித்த முகம்
உள்ளவர்களையா! வெகுளியாக
இருப்பவர்களையா! இப்படி கவரக்கூடிய
எதாவது ஒரு குணம் இருப்பவர்களைதான்
நீங்கள் விரும்புவீர்களா! உங்களிடம்
கேட்டால் ‘ஆம்’ என்றுதான் சொல்வீர்கள், ஆனால்
சில வேளைகளில் இந்த குணங்கள்
எதுவுமே இல்லாதவர்களையும் நீங்கள்
விரும்பியிருப்பீர்கள், அவர்களிடமும்
மணிக்கணக்கில் பேசியிருப்பீர்கள், நீங்கள்
எதிர்பார்க்கும் குணம் இல்லாத போதும் அவர்
உங்களை விரும்ப வைத்திருக்கிறார்
அது எப்படி?
சிலர் இயற்கையிலேயே அழகில்லாதவர்களாக
இருக்கலாம், அது நீங்களாகவும்
இருக்கலாம். சிலருக்கு இனிமையாக
பேசுகின்ற வரம் கிடைக்காமலிருக்கலாம்,
அதுவும் நீங்களாகவும் இருக்கலாம்,
பரவாயில்லை, அழகு என்பது நம்மில்
பிரதிபலிக்க வேண்டிய ஒன்று,
அது உடம்பிலிருந்துதான் பிரதிபலிக்க
வேண்டும் என்ற கட்டாயமில்லை, நம்
செயல்களில் பிரதிபலிக்கலாம்,
எண்ணங்களில் பிதிபலிக்கலாம்,
குணநலன்களில் பிரதிபலிக்கலாம்.
உங்கள் உதடுகள் சில்லரைகளைப் போல
சிணுங்கிக் கொண்டிருக்க மறுக்கலாம்,
பரவாயில்லை,
பேசுவது இரண்டு வார்த்தைகளாக
இருந்தாலும் சில்லரையாக சிந்தாமல்
நோட்டுக்களாக அவிழ்த்து விட்டால், உங்கள்
பேச்சுக்களே விரும்பப்படும்.
சிலரைப்போல சிரித்த மாதிரியான முகம்
உங்களுக்கு இயற்கையாகவே இல்லாமல்
இருக்கலாம். பரவாயில்லை,
சிரிப்பை தேவைக்கு சிந்தினாலே போதும்
நீங்கள் அனைவராலும் விரும்பப்படுவீர்கள்.
இப்படிதான் சிலருக்கு முக்கிய
தகுதிகள் தோற்றத்திலோ, உதடுகளிலோ,
நடை உடை பாவனைகளிலோ,
இருப்பதில்லை அவை மறைந்திருந்து கொண்டு
செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
அப்படிப்பட்டவர்களை உங்களுக்கும்
விரும்பத் தோன்றும். நண்பனாக்கிக் கொள்ளத்
தோன்றும். நீங்களும்
உங்களுக்கு பிடித்தமான ஒரு விசயத்தில்
உங்களை வெளிப்படுத்திக் கொண்டிருங்கள்.
உங்களுக்குள் இருக்கும்
ஒரு அழகை வெளியே பிரதிபலித்துக்
காட்டுங்கள், எல்லாராலும் விரும்பப்
படுவீர்கள்.
பிறருக்கு பிடித்தமானவராக இருக்க
தினம் தினம், புதுப்புதுத்
துணிமணிகளை உடுத்த வேண்டிய
தேவையில்லை, அணிந்திருக்கும்
உடை உங்களுக்கு பிடித்தமானதாகவும்,
சுத்தமானதாகவும் இருந்தாலே போதும்.
நாளுக்கு நாள் உங்களை கலர்கலராக
மாற்றிக்கொண்டிருந்தால் பார்ப்பவர்களின்
மனம் ஆரம்பத்தில் விரும்பினாலும்
போகப்போக ஏளனமாக பார்க்க ஆரம்பிக்கும்.
மற்றவர்கள் உங்களை விரும்ப
வேண்டுமென்பது, உங்கள் தோற்றத்தை விரும்ப
வேண்டும் என்ற
முடிவிற்கு வந்து விடாதீர்கள். நீங்கள்
ஒரு படைப்பாளியாக இருந்தால்,
உங்களை விடவும் உங்கள் படைப்பு விரும்பப்
படுவதையே விரும்புவீர்கள். நீங்கள்
ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தீர்களானால்,
உங்களை விடவும் உங்கள் நிறுவனம்
விரும்பப் பட
வேண்டுமென்றே எதிர்பார்ப்பீர்கள். உங்கள்
உள்ளிருக்கும் அழகின் வெளிப்பாடுதான்
நீங்கள் ஆரம்பிக்கும் நிறுவனமாகவும்,
தொழிலாகவும், படைப்பாகவும்
வெளிப்படும் போது,
அவை விரும்பத்தக்கதாக இருந்தால்
நீங்களும் விரும்பத்
தக்கவர்களாகவே இருப்பீர்கள்.
சில கல்லூரிகளின் கடைசி நாட்களில்,
மாணவிகளிடம் உங்களுக்கு மிகவும்
பிடித்த மாணவன் யார் என்ற பட்டியல்
கேட்கப்படும். அப்போது அந்த மாணவிகள்
மிகவும் அழகான
ஒரு மாணவனையோ அல்லது இடைவிடாமல்
பேசிக்கொண்டிருக்கும் ஒரு மாணவனையோ,
யாரையாவது கிண்டலடித்து சிரிப்பை
வரவழைக்கின்ற மாணவனையோ மிகவும்
பிடிக்கும் என்று சொல்லமாட்டார்கள்.
அவர்களின் பட்டியலில் ஆத்மார்த்தமான
வேறு ஒரு முடிவே வரும். அமைதியாக
இருந்தாலும், அழகில்லாமல் இருந்தாலும்,
தன்னுள் இருக்கும் அழகான
குணத்தை செயல்களாக உருவாக்கிக்
கொண்டிருக்கும் மாணவனையே மிகவும்
பிடிக்கும் என்ற பட்டியலை தயார்
செய்வார்கள்.
ஏனைன்றால் அவன் அமைதியாக இருந்தாலும்,
பொறுப்புகளை முன் கூட்டியே யோசித்து,
செயல்பட்டுக் கொண்டிருப்பவனாக
இருப்பான். கல்லூரி பாடங்களில்
மட்டுமல்ல,
கல்லூரி விழாவிலிருந்து சுற்றுலா
வரையிலும் எவற்றையெல்லாம் மற்றவர்கள்
எவற்றைச் செய்யாமல் இருக்கிறார்களோ,
அவைகளை முன்னதாகவே யோசித்து தன்
அழகை வித்தியாசமாக வெளிப்படுத்திக்
கொண்டிருப்பான். இப்படி தன்
விருப்பங்களில், திறமைகளில் இருக்கின்ற
அழகினை செயல் வடிவமாக செதுக்கிக்
கொண்டிருப்பவர்களையே மற்றவர்கள் விரும்ப
ஆரம்பிப்பார்கள்.
தோற்ற
அழகு மட்டுமே உள்ளவர்களை மற்றவர்கள்
கண்களால் படம் பிடித்து, இதயத்தில்
எளிதாக சேமித்து வைப்பார்கள். அழகாக
இருப்பவர்கள் மற்றவர்கள் இதயத்தில்
எளிதாக இடம்பிடித்து விடுவார்கள்.
ஆனால் அவர்களின் அழகு அட்டைப்படத்தைப்
போல வெளியில்தான் அழகாக இருக்கும்,
உள்ளே புரட்டிப் பார்க்கும்
போது ஒன்றுமிருக்காது. அதுவே அழகற்ற
அட்டைப் படமாக இருந்தாலும் புரட்ட
புரட்ட இனிக்கும் புத்தகங்களைப் போல
இருப்பவர்களே, மற்றவர்களின் இதயத்தில்
அழிக்க முடியாத தனி இடத்தைப்
பிடித்தவர்களாக இருப்பார்கள்.